ஆன்டன் செகாவ் சிறுகதைகள்
ஆன்டன் செகாவ் சிறுகதைகள்
உப்புச்சப்பற்ற, சலிப்புமிக்க, அர்த்தம் புரியாத, துயரம் நிறைந்த இந்த வாழ்க்கையின் நிதர்சனத்தை இவ்வளவு சுவாரசியமாக எந்த எழுத்தாளராலும் வர்ணிக்க இயலாது. வாழ்வின் அத்தனை அம்சங்களையும் செகாவ் தனக்கேயுரிய மாறுபட்டக் கோணத்தில் அணுகியிருப்பதை அவருடைய கதைகளில் அறியலாம். செக்காவின் கதையுலகில் உள்ள மனிதர்கள், நம்மைப் போல் சராசரியானவர்கள்.அவர்கள் விசித்திரமானவர்கள், வினோதமானவர்கள்.சமூகத்தில் வாழும் சில விளம்பர பிரியர்களை போல் இல்லாமல் தனிமையில் வாழ்பவர்கள். வெளியில் புலப்படாத மனித மனத்தின் நற்குணங்கள், பலவீனங்கள், கசடுகள், வன்மங்கள், ஏக்கங்கள், துயரங்கள், எதிர்பார்ப்புகள் எனப் பல்வேறு அம்சங்களை கதையில் விவரிப்பதுடன் மனிதனின் கீழ்மைப் பண்புகளுக்குக் காரணமான சமூகத்தை விமர்சிக்கவும் தயங்குவதில்லை. செகாவின் கதைகளை வாசிப்பவர், ஏதாவது ஒரு கட்டத்தில் தனக்குள்ளாகவோ, தன்னை மீறி வாய்விட்டோ சிரித்துவிடுவர். ஏனெனில், செகாவின் எழுத்து நடையில், நகைச்சுவை இயல்பாகக் கலந்திருக்கும். தன் கருத்துக்களைத் தயக்கமின்றித் தெரிவிக்க அவருக்கு இந்த நகைச்சுவை உதவுகிறது.
இவரின் சிறுகதைகள் அனைத்தும் ஆச்சரியம்தான். இவரின் கதைகளை வியந்து வாசித்தேன்.
ஒரு இசை நாடக நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது செர்வ்யாகோவிற்கு தும்மல் ஏற்படுகிறது. அது எந்த பார்வையாளர்கள் பாதித்திருக்குமோ என சுற்றும் முற்றும் பார்க்கிறார் அது முன்வரிசையில் அமர்ந்து இருக்கும் பிரிழால்வ் கைக்குட்டை எடுத்து தன் முகத்தை துடைத்துக்கொண்டிருப்பதை பார்க்கிறார். தன் தும்மினால் அவருக்கு இடையூறு செய்து விட்டேன் என நினைத்து அவரிடம் தொடர்ந்து மன்னிப்பு கேட்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் கெட் அவுட் என கத்தி விடுகிறார் பிரிழால்வ்.வீடு வந்த செர்வ்யாகோவ்க்கும் மிகுந்த பெருமூச்சுடன் சோபாவில் படுத்தவாறே இறந்து விடுகிறார்.
மற்றொன்றில் மீன் சுவைக்க மிகுந்த ஆர்வத்தோடு தன் இதழ்களை குவித்து 'ச்' என அகினீவ் சப்பு கொட்டினான். அப்போது அந்த அறைக்கு வருகின்ற வான்கின் "நீ பரிமாறும் உதவியாளருக்கு முத்தம் கொடுத்தாயா " என்கிறார்.பின் வான்கீன் வேறு பெண்ணுடன் சிரித்து பேசுவதை அகினீவ் பார்க்கிறான்.அவன் தன்னைப் பற்றியும்,உதவியாள பெண்ணை பற்றியும் அவதூறு கிளப்புவதாக எண்ணுகிறான்.
ஆகவே வருத்தம் கொண்ட அகினீவ் விருந்துக்கு வந்திருக்கும் ஒவ்வொரிடமும் தானே வலியச் சென்று தான் உதவியாள பெண்ணை முத்தமிடவில்லை.மீனை சுவைக்க சப்பு கொட்டினேன் என உளறி கொட்டிவிடுகிறான்.
செய்தி ஊர் முழுக்க பரவ,குழப்பமடைந்த அகினீவ் கோபத்துடன் வான்கினோடு சண்டையிடுகிறான்.
வான்கின் "நான் உன்மீது அவதூறு கிளப்பியிருந்தால் கடவுள் என்னை தண்டிக்கட்டும்" என்கிறான்.அப்போது "அவதூறு பரப்பியது யார்" என குழப்பத்தில் அக்னீவ் கேட்பது போல "வாசகர்களே உங்களுக்கு தெரியுமா ? " என செகாவ் நம்மை வினாவியுள்ளார்.
இப்படியும் கதை மாந்தர்களாக!, இப்படியும் கதையை நகர்த்த முடியுமா!, இப்படியும் கதை சொல்ல முடியுமா!என பெரிய ஆச்சரியங்கள் நிறைந்திருந்தன.
செகாவ் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், அவரது படைப்புகள் நம்மை ஈர்க்கவும் அவற்றை நாம் கொண்டாடவும் முக்கியக் காரணமாக அமைபவை, அவற்றில் உள்ள எளிமையும் யதார்த்தமுமாகும்.
கார்த்திக் கிருபாகரன்
Comments
Post a Comment