ஆலமரம்


                              
ஆத்தோரம் ஆலமரம் பல ஆண்டா வளர்ந்த மரம்!

ஓங்கி வளர்ந்து தழைத்து தொங்கும் விழுதுகள் நிறைந்த மரம்!

நீடித்த வெயில் அடிக்கயில் நிழல் தந்து காத்த மரம்!

பல புயல் வந்த போதும் களங்காம நின்ற மரம்!


பதினெட்டு பட்டி பஞ்சாயத்துக்கள் நடந்த மரம்!

பலரோட நினைவுகளை சுமந்து நிற்கிற மரம்!

இப்படி சொல்லிகிட்டே போனாலும்,மூன்று நாட்களா பெய்யுற மழை.மிகப் பெரிய சூறாவளி கரை கடந்து போயிருக்கு.அதனால் 'எப்புடியும் ஆலமரம் சாஞ்சிருக்கும்னு' ஊருக்குள்ள பேசிக்கிறதை கேட்குறப்ப வேம்பனுக்கு மனசு கவலையாவே இருந்தது.

சூறாவளி வந்து பல வீடு,கூரை,நிலம்,தோப்பு எல்லாம் சேதரமாகிருக்கு.ஆனாலும் அந்த ஊர் மக்களுக்கு 'ஆலமரத்துக்கு என்னாச்சுகிற' மனநிலை தான் இருந்தது.

இந்த ஆலமரத்தை வேரோட எடுக்க பல வருஷமா,பல பேர் முயற்சி பண்ணிட்டுதான் இருக்காங்க.அதில் ஐந்து வருஷத்துக்கு முன் ஆளும் கட்சி நான்கு வழி சாலை திட்டத்தை கொண்டு வந்தாங்க.ஊர் சுடலமுத்து எதிர்கட்சி எம்எல்ஏ வா இருந்தார்.
ஊர் மக்களோட சேர்ந்து கடுமையா போராடி ஆலமரத்தை வெட்ட விடாம பண்ணினார்.சாலை திட்டமும் வேறு காரணமா கிடப்பில் போயிடுச்சு. ஆனால் இப்ப ஆளும் கட்சி எம்எல்ஏவாகிட்டார். 
ஆலமரத்தை ஓட்டியே இருக்குற தொடக்கபள்ளிய மேல்நிலை பள்ளிய மாற்ற, 300 வருட பழமையான ஆலமரமத்தை அடியோட வெட்டி பள்ளிகூடம் கட்ட போறத சுடலமுத்து முடிவு பண்ணிருக்கார்.

இந்த செய்தி அந்த ஊர் மக்களுக்கு வருத்தமா இருந்தது. இந்த விஷயத்தால் ஊரில் பஞ்சாயத்து கூடினாங்க.


"ஆனா பள்ளி கொடம் தானே வர போகுது.புள்ளங்க படிப்பு தானே முக்கியம்னு" கிராம மக்கள் நிறைய பேர் மனசை தேத்திக்கிட்டாங்க.ஆனா சில பேரால அது மாதிரி மனசை தேத்திக்க முடியலை.  ஏன்னா! இந்த ஆலமரத்தில் தான் எத்தனை எத்தனை பஞ்சாயத்து,தகராறு, சண்டை, கல்யாணம், காதுகுத்துன்னு சகலமும்  நடந்து வந்துச்சு.

அந்த பஞ்சாயத்து கூட்டத்தில் வேம்பனும்,அவனோட நண்பர் கூட்டமும் கூட இருந்தாங்க.
பெரியவங்களிலிருந்து சின்னவங்க வரைக்கும் அந்த மரத்துகாக பஞ்சாயத்தில் கூடியிருந்தாங்க.

"அட நீ வேற வம்பு பண்ணாதீங்க.மரந்தானே! ஊருக்கு நல்லதுக்கு இழக்குறோம்ன்னு" சமாதானபடுத்தினார் ஊர் பஞ்சாயத்து தலைவர்.

 "அய்யா,இந்த ஆலமரத்துனால தான் நம்ம ஊருக்கு ஆலமரத்துபட்டின்னு பேரு வந்துச்சு. இந்த ஆலமரத்தோட பெருமைய மத்த ஊர்காரர்களுக்கு சொல்லி பெருமைப்பட்டுக்குவோம்.இப்ப நம்ம ஊர் வரலாற்று சின்னத்தையே அழிக்கிற மாதிரி இருக்கு" என்று புரட்சியாளர் செந்தமிழ் வருத்தப்பட்டார்.

அந்த கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவர்களுக்கு செந்தமிழனின் பேச்சு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.மரத்துகாக பேசுறாருன்னு உறுதுணையா இந்த சிறுவர்களும் இருந்தாங்க.
ஏன்னா! பள்ளி முடிந்தவுடன் மாலையில் அந்த ஆல மரத்தின் விழுதுகளை பிடித்து நீண்ட நேரம் விளையாடி விட்டு, அதன்பின் தான் வீட்டிற்கு செல்வார்கள்.விடுமுறை நாட்களும் அந்த ஆலமரத்தடியில் தான் விளையாடுவார்கள். 

பஞ்சாயத்து தலைவருக்கும், செந்தமிழுக்குமான பேச்சு நீண்டு கொண்டே சென்றது முடிவில் "எம்எல்ஏ நம்ம ஊருக்கு நல்லதுதான் பண்ணுறாரு.பெரிய பள்ளிகூடம் நம்ம ஊருக்கு வர கூடாதுன்னு சொல்லாத" என்றார் தலைவர்.


"நான் பெரிய பள்ளி கொடம் வேணாம்னு சொல்லல.அத இப்ப இருக்குற தொடக்கபள்ளிக்கு பின்னால இருக்குற தரிசு இடத்துல கட்ட சொல்லி அரசாங்கத்துகிட்ட பேசுங்க.நல்லது பண்ணாறங்கன்னு நினைச்சு நம்ம வரலாற்றையும்,நினைவா இருக்குற மரத்தை அழிக்கிறத நான் அனுமதிக்கமாட்டேன்.நான் மட்டுமில்ல நம்ம ஊர் மக்களும் பொறுத்துகிட்டு பேசாம இருக்கமாட்டாங்க" என ஆவேசமாக செந்தமிழ் பேசினார்.
ஏதோ நடிகர் சினிமாவில் வசனம் பேசுறத பார்த்து ரசிக்கிற மாதிரி எல்லா சிறுவர்களும்,பெரியவர்களும் செந்தமிழ் பேசுவதை ரசித்தார்கள்.

"ஆமாப்பா,நம்ம தமிழ் சொல்லுறதுல ஒன்னும் தப்பில்லையே! நாம வளந்த மரம் அது" என்றார் ராசு மாமா.

"என் வயசு ஆளுக படிச்சது கூட ஆலமரத்தடியில் தான். அந்த காலத்துல டீச்சர் ஆலமரத்து அடியில் தான் எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தாங்க. அதெல்லாம் மறக்க முடியுமா!" என பல் இல்லாத பொக்கை வாயில் சிரத்தபடி நினைவை பகிர்ந்தார்  வேலு தாத்தா.


 "நம்ம ஊர் மக்கள் கருத்த தலைவர் அய்யா ஏத்துகனும்.நம்ம ஊர் ஓட்டுதானே அவர் எம்எல்ஏ ஆகிருக்காரு.நாம சொன்னா, செய்யமாட்டாரா!" என கூட்டத்தில் பாதி மக்கள் கூச்சலிட்டனர்.

"அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆலமரத்த வெட்டகூடாதுன்னு போராடின எம்எல்ஏ.இப்ப ஏன் வெட்ட நினைக்கனும்.தொடக்கபள்ளி பின்னாடி இருக்குற தரிசு நிலத்த தனக்கு சொந்தமாக்க எதுவும் திட்டம் போடுறாரோ?" என்று விலங்கமான கேள்வியா கூட்டத்தில் செந்தமிழ் கேட்கவும்.எல்லாரும் அமைதியாகி யோசிச்சாங்க.

அதுவரை அமைதியா இருந்த தலைவர் எழுந்து,"எம்எல்ஏ என்ன திட்டம் பண்ணுறாருன்னு தெரியல. நான் தப்பு பண்ணிட்டேன். புள்ளைங்க படிப்புக்காகன்னு இப்படி நெனச்சேன். ஆனா நம்ம நினைவு  அது. வெட்டகூடாது.வெட்டவும் உட மாட்டேன். என் புத்தியில படுற மாதிரி சொன்னீங்க.கண்டிப்பா நான் எம்எல்ஏ கிட்ட பேசுறேன் அந்த மரத்தை வெட்டாம பின்னாடி பக்கம் ஸ்கூல் கட்ட ஏற்பாடு பண்றேன்" என்றார் தலைவர்.

"நல்ல முடிவா எடுங்கன்னு" சொல்லி கூட்டம் கலைய ஆரம்பிச்சது.

செந்தமிழை பார்த்து மணி, "அண்ணே,மரத்த வெட்டமாட்டாங்கள்ல" என்றான்.

சிரித்தபடி நின்றார் செந்தமிழ்.

"அண்னே, எதாவது சொல்லுனே!" என்றான் சாமி.

"தம்பி, பஞ்சாயத்து தலைவர் எதிர்கட்சி.எம்எல்ஏ ஆளுங்கட்சி. அவங்க திட்டத்துக்கு இவங்க எதிர்பாங்க.அதனால மரத்த வெட்ட வாய்ப்பு கம்மிதான்"

"அப்போ,தலைவர் ஆளுங்கட்சி ஆகிட்டா?"

"இதே திட்டத்துக்காக மரத்த வெட்டுவாங்க"

குழப்பமா," என்னனே,இது" என்றான் மணி.

"அதான் அரசியல்ப்பா"

வாயை பொத்திக்கொட்டு நமட்டு சிரிப்பு சிரித்து,"அண்ணே,நீ அரசியலுக்கு வந்து,தலைவராகி,இத தடுக்கலாம்ல"என்றான்  வேம்பன்.

"நம்ம தாத்தா,அப்பா எல்லாம் 60 வருஷமா,மாத்தி,மாத்தி ஓட்டு போட்டு இவகிட்ட நாட்ட குடுத்திட்டாங்க.புதுசா,வந்து என்ன சொன்னாலும்,இவுகளுக்கு புரியாது.பட்டு திருந்தட்டும்" என்று சொல்லிவிட்டு செந்தமிழ் கிளம்பினார்.

பொழுது சாயும் நேரம் சிறுவர் கூட்டம் ஆலமரத்தடியில் கூடியது.

"மரத்த வெட்டாம இருக்க ஏதாவது செய்யணும்" என்று சிறுவர் கூட்டம் யோசிக்க ஆரம்பிச்சது.

"நாம செஞ்ச சின்ன புள்ளைங்க இதுல தலையிடாதீங்கன்னு நம்மள கொட்டி உட்கார வப்பாங்க. அதுக்காக நம்ம மரத்தை வெட்ட முடியுமா ?, நாம விளையாடுற மரம்.  இந்த மரத்தை எப்படியாவது காப்பாத்தணும் ஏதாவது வழி இருந்தா சொல்லுங்கன்னு" ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு யோசனை சொல்ல ஆரம்பிச்சாங்க. இருட்டவும் ஆரம்பிச்சது. அப்ப அங்கிருந்த வேலு தாத்தாக்கிட்ட யோசனை கேட்டாங்க.



                                                                                பொக்க வாயில சிரித்தபடியே, "அந்த காலத்துல, நிறைய மரம் நட்டாங்க.அப்பறம், சில பேரு மரத்த வெட்ட ஆரம்பிச்சு,அதையே வியாபாரம் பண்ணாங்க. அப்போ, மரத்த காப்பாத்த,நாங்கெல்லாம் புள்ளையார் சிலை,சூலம்,மஞ்ச துணின்னு மரத்துல கட்டி விடுவோம்.சாமி இருக்குற மரம்னு யாரும் வெட்ட மாட்டாங்க.பயபுடுவாங்க.இப்புடிதான் மரத்த காப்பாத்தினோம்" என்றார்.

அப்போ வேம்புக்கு ஒரு யோசனை தோணுச்சு. "டே,எனக்கு ஒரு யோசனை தோணுது. நாம எல்லாரும் அய்யனார் கோயிலுக்கு போலாம் வாங்க" அப்படின்னு சொல்லி அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து அய்யனார் கோயிலுக்கு வந்தாங்க. சுத்தி முத்தி பாத்தாங்க யாருமே இல்லை. அய்யனார் சாமிகிட்ட வேண்டிக்கிட்டு. அங்க இருக்க ஒரு அரிவாளை பிடுங்குனான் வேம்பு.அந்த அரிவாளை தூக்க முடியாம தூக்கிட்டு நின்னான். எல்லாருக்கும் பயம் வர ஆரம்பிச்சது. "டேய் எதுக்குடா அரிவாள புடுங்குனன்னு"  பயந்தான் மணி. "எல்லாம் ஒரு காரணமாத்தான்" அப்படின்னு சொல்லிட்டு, அத தூக்கிட்டு  ஆலமரத்துக்கு வந்து, சுத்திமுத்தி பார்த்து ஆலமரத்து கீழ குத்தி வச்சான்.மஞ்ச துணி எடுத்து மரத்துல கட்டி விட்டான்.வேம்பு செய்றது மத்தவங்களுக்கு புரிந்தது.

எல்லாம் முடிச்சு,"டேய் யார் எது கேட்டாலும் எதுவும் தெரியாத மாதிரியே இருங்க" என்றான் வேம்பன்.

"அரிவாள குத்துனா,யாரும் எதுவும் பண்ணமாட்டங்களா ?"


"செய்யமாட்டாங்க.வேலு தாத்தா சொன்ன மாதிரி சாமி மரம்னு வெட்ட மாட்டாங்க.சாமி ஊர காப்பாத்துற மாதிரி,மரத்தையும் காப்பாத்தும்" என்றான் வேம்பன்.



"எப்படியோ,மரத்த காப்பாத்திடலாம்னு"  நினைச்சு எல்லா சிறுவர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டு அரிவாளை கும்புட்டு,அங்கிருந்து கிளம்புனாங்க.

 
இரவு பொழுதிலே தென்மேற்கு பருவமழை  சூறாவளியாய் சுழன்று வந்தது. பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்தது. சூறாவளி சுழன்று அடித்தது.மூன்று நாட்கள் தொடர்ந்தது.வீட்டை விட்டு வெளி வரமுடியாத சூழல் நிலவியது.ஆனால் 'ஆலமரம் சாய போகுதுன்னு" பேச்சு ஊருக்குள்ள உலாவுச்சு.

"அம்மா ஆலமரம் சாஞ்சிருமா ?" என்றான் வேம்பன்.

"25 வருஷத்துக்கு முன்ன இப்புடிதான் சூறாவளி வந்து,மரத்த சாய்க்க பாத்துச்சு.ஆனா சாயல.அதுமாதிரி இப்பவும் சாயாது" என்றாள்.

ஆனால் இன்று உலா வரும் செய்தி பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது.


சூறாவளி வேகத்தால் தாக்குப் பிடிக்க முடியாத இந்த ஆலமரம்  வேரோடு சாய்ந்து விழுந்தது. கிராமங்களில் ஆற்று நீர் உட்புகுந்து, பல வீடுகளும் சேதமானது.


“ஆலமரம் விழுந்துருச்சு” என்ற தகவல் ஊர்முழுக்க பரவியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊரே ஓடிவந்தது. கீழே விழுந்து கிடந்த மரத்தை கட்டிக் கொண்டு மக்கள் அழுதனர். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வகையில் ஆலமரம் பல நிகழ்வுகளை தந்ததை நினைத்து நினைத்து கதறினர். வேம்பன்,மணி என சிறுவர்கள் கூட்டம் நிலைக்குலைந்து கண்ணீர் வடித்தார்கள்.  ஊன்றி வைத்த அய்யனார் அரிவாள் சரிந்து கிடந்த இடத்தில் மண்டி போட்டு "மரத்த ஏன் காப்பாத்தலன்னு" அழுதான் மணி.



கார்த்திக் கிருபாகரன்




Karthik Kirubakaran

Comments

Popular posts from this blog

சாவு ரகசியம்

சிகப்பு விளக்கு

வெண்ணிற இரவுகள்