சாவு ரகசியம்
நள்ளிரவு தாண்டிய நேரம்.அடியாநத்தம் அரசு மருத்துவமனை..அமைதியான மருத்துவமனையில்
அந்த நேரத்தில் ஒரு பெண்ணின் குரல் மட்டும் எங்கும் எதிரொலித்தது."என்னவிட்டு போய்டீங்களே!,உங்கள இப்புடி பண்ணது யாருங்க ?" என்று கதறி அழ,அருகிலிருந்த போலீஸ்காரர்களுக்கும் "இந்த கொலை எப்படி நடந்தது ?"என்ற குழப்பத்தில் நின்றனர்.
நள்ளிரவில் அந்த கதறல் சத்தமே!,அங்கு கூட்டம் கூடியது.
"சொத்துக்காக பங்காளி சண்டை நடந்திருக்குமோ?,இல்லை இவர் முன்னாள் எம்எல்ஏ.அரசியலில் இருக்கிற ஆள்.அதனால் எதிரி எவனோ கொன்னுருப்பானோ!" என்று போலீஸ் விசாரித்து கொண்டிருக்க,அந்த நேரத்தில் கூட்டத்திலிருந்து ஒருவன் வந்து நின்றான்.நடுத்தர உயரம்,கருத்த நிறம்
காக்கி சட்டை,பேன்ட் அணிந்திருந்தான்.அப்பாவியான குணமும்,மணமும்.அவன் அந்த அரசு மருத்துவமனை பிணவறை இரவு நேர சிப்பந்தி.
கதறி அழும் பெண்ணை பார்த்து வருத்தப்பட்டு கொண்டிருந்தான்.
"யோவ்,என்னைய்யா, நின்னு வேடிக்க பார்த்துட்டு இருக்க,டெட்பாடிய உள்ள எடுத்துட்டு போ" என்று அவனை பார்த்து கடுப்பாகி இன்ஸ்பெக்டர் அதட்டினார்.
அதட்டல் சத்ததிற்கு சட்டென்று நிசப்தமானது,அங்கிருந்தவர்கள் இன்ஸ்பெக்டரை வெறிக்க பார்த்தனர்.அவரும் குழப்பமாக சுற்றி இருப்பவரை பார்த்தார்.
"வா சாமி,வந்துட்டியா ?, இந்த கொடுமைய பாரு சாமி" என்று இறந்தவரின் தாயார் அவனை அனைத்து அழுதாள்.அவன் எந்த அசைவில்லாமல் அமைதியாக நின்றான்.
"போ....சாமி,என் புள்ளய்ய கொன்னது யாருன்னு சொல்லு சாமி" என்று அவனை இழுத்து இறந்து கிடக்கும் பிணத்தின் அருகில் உட்கார வைத்து,அவன் உள்ளங்கையில் இறந்தவனின் கையை வைத்தாள்.
கதறி அழுத மனைவியோ, கதறலை நிறுத்தி,கண்ணீர் சொட்ட அவனை வேடிக்கை பார்த்தாள்.
பிணத்தை ஒரு பார்வை பார்த்து,பெருமூச்சு விட்டு,அதன் உள்ளங்கை பிடித்து,கண்களை மூடினான். அமைதியாக நடப்பதை சுற்றி நின்றவர்கள் பார்க்க ஆரம்பிக்க,"டேய்,டெட்பாடி கை பிடிக்காதடா!" என்று கத்தியபடி வந்த இன்ஸ்பெக்டரை,ஏட்டு நிறுத்தி, "சார் இருங்க" என்று அமைதிபடுத்தினான்.
"இதோ, பாரு...பண்ணுறத பண்ணிட்டு,போலி சாமிய கூட்டிட்டு வந்து,லூசுதனமா பண்ணுறீயா" என்று மாமியாரை திட்டி தீர்த்தாள் மருமகள்.
"சும்மா நிறுத்துடீ !, உன்ன பத்தியும்,உன் கேவலமான குடும்பத்த பத்தியும் தெரியாதா ?" என்று கோபபட்டாள்.
"அப்படி என்ன நாங்க உன்ன விட கீழ்தரமா போயிட்டோம்" என்று மாமியாரை தாக்க வந்தவளை தடுத்து குடும்பத்தினர் பிரிக்க,சலசலப்பு நடக்க தொடங்க,சாமி கண் விழித்து,கையை விட்டு, இடத்தை விட்டு எழுந்தான்.சட்டென்று சலசலப்பு குறைய,"சாமி சொல்லு சாமி" என்று தாயார் அழ தொடங்கினாள்.
"உன் மருமக தான்ம்மா...கொன்னுருக்காங்க” என்றபடி அங்கிருந்து நகர்ந்தான்.
"அடியே,என்னமோ! யோகிஸ்தி மாதிரி பேசுனியே! இப்ப சொல்லுடி" என்று மருமகளை ஓங்கி அறைந்து,கெட்ட வார்த்தையில் திட்டி சகட்டு மேனிக்கு தாக்க,ஒரு கட்டத்தில்
கோபத்தில் "ஆமா,நான் தான் கொன்னேன். பணத்தையெல்லாம் கூத்தியாளுக்கு குடுத்துட்டு என்னையும்,என் புள்ளைகளையும் பிச்ச எடுக்க விட்டான்.அதான் கொன்னேன்" என்று மருமகள் ஆவேசமாக கத்திய போது,இன்ஸ்பெக்டர் ஆச்சரியத்தில் உறைந்து போய் திரும்பி அவனை பார்த்தார்.
அமைதியாக கை கட்டி கூட்டத்தோடு கூட்டமாக நின்றவனை,"டெட்பாடிய உள்ள எடுத்துட்டு போ" என்று ஆச்சரியம் கலந்த குரலில் இன்ஸ்பெக்டர் அவனிடம் சொன்னார்.
பதில் ஏதுவும் சொல்லாமல் "ம்..." என்றவாறு,ஸ்ட்ரெச்சரை இழுத்து,உடன் வேலை பார்க்கும் ராசுவுடன் பிணத்தை எடுத்து கொண்டு பிணவறைக்குள் எடுத்து சென்றான்.
உள்ளே குளிர் பதன அறைக்குள் சென்றதும்,அங்கே பல ஸ்ட்ரெச்சரில் பிணங்கள் கிடந்தன.அவற்றோடு கொண்டு வந்த பிணத்தையும் நிறுத்தினான்.அருகே ஒரு பிணத்தின் கை கீழே தொங்கியபடி இருந்தது.அந்த கையை பிடித்து விழாமல் நேராக வைத்து ஒழுங்குபடுத்தி கொண்டிருக்க,வழக்கம் போல ராசு அறையில் மறைத்து வைத்திருந்த குவாட்டர் பாட்டிலை எடுத்து,"டேய்,ஓசி குடி.. ஒரு கட்டிங் போடுறீயா ?" என்று சாமியிடம் நக்கலாக கேட்டான்.
"வேண்டாம்" என்று தலையசைத்தபடியே,வெள்ளை துணி போடபட்டு கிடக்கும் மூடிய பிணங்களை சாமி பார்வையிட்டான்.
அங்கிருந்து மேஜையில் சாவுகாசமாக உட்கார்ந்து குவாட்டர் பாட்டிலை திறந்து, தண்ணீர் பாட்டில் எடுத்து,ஒரு குவளையில் ஊற்றி விரலாலே ஒரு கலக்கு கலக்கி குடித்துக் கொண்டிருந்தான் ராசு. அறைக்கு வெளியே கதறல் சத்தமும்,சலசலப்பும் குறைந்து, இறந்தவரின் மனைவியை கைது செய்து கொலை குற்றத்திற்காக விசாரணைக்கு காவலாளிகள் அழைத்து செல்ல, கூட்டமும் சற்று கிளம்பியது. இரண்டு காவலர்கள் மட்டும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்.
அறை உள்ளே,சரக்கு ஒரு ரவுண்டு அடித்து, ஒரு புன்சிரிப்பு சிரித்து, "இன்னைக்கு பாத்தியாடா! போலீஸ்க்காவல் வெளியில இருக்க, நான் சரக்கு அடிக்கிறேன்.ஹா... ஹா.. ஹா" என்று ஒரு சிரிப்பு சிரித்து மீண்டும் சரக்கை ஊற்றி, தண்ணீரை ஊற்றி ஒரு கலக்கு கலக்கி குடித்தான் ராசு. அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தான். "இந்த நிலைமைய பார்த்தியாடா!,எவ்வளவு மோசமா இருக்கு. உன் நிலைமையும் தான் மோசமா இருக்கு. எனக்கு மறுவாழ்வு கேட்டு நான் ஒரு கடிதாசி போட்டேன். பெரிய ராஜ உத்தியோகம் கொடுக்க போறாங்களோன்னு நெனச்சேன். கடைசில பிணத்தைக் பார்த்துகிற வேலையை கொடுத்துட்டாங்க. சரி தான் கழுதை என்ன இருந்தாலும் இது கவர்மெண்ட் வேலை.அது ஏதோ ஒரு வேலைன்னு! மனசை தேத்தி பாத்துகிட்டு இருக்கேன். ஆனா உன் தலை எழுத்து பாரு. உங்க அப்பன் செத்து போயிட்டான். உனக்கு இந்த வேலை கிடைச்சிருக்கு. செத்தாலும் செத்த உங்க அப்பன் ஒரு தாசில்தார இருந்து செத்திருந்தாலும், உனக்கு கௌரவமான வேலை கிடைத்திருக்கும். அவனும் வார்டு பாயா செத்துப்போனான். அதனால் உனக்கு இங்க வார்டுபாயாவே வேலை கிடைச்சிருக்கு.அதுசரி நீயும் ஒழுங்கா படிச்சியா!,அதுவும் இல்ல.உன் எட்டாம் கிளாஸ் படிப்புக்கு, இதுதான் தலை எழுத்து.அதுமில்லாம செத்தவன் ரகசியத்தை சொல்லுற வேள வேற" என்று நக்கலாக சிரித்தபடியே குவளையில் ஊற்றி குடித்துக் கொண்டிருந்தான்.
"அண்ணே, டாக்டர் வந்திருவாங்க. குடிக்காதீங்க" என்று சாமி அமைதியாக சொன்னான்.
"போடா....எவன் வந்தா எனக்கென்னா" என்று சொல்லியபடியே சரக்கை ஊற்றி கலக்கி குடித்தபடியே," நான் செத்த என் ரகசியம் என்னான்னு,கை வச்சு கண்டுபிடிப்பியா ?" என்றான்.
"அட போங்கண்ணே! உன்கென்னா ரகசியம் இருக்க போகுது"
"இருக்கும்டா! எல்லா மனுசனுக்குள்ளையும் யாருக்கும் சொல்லாத ரகசியம் இருக்கும்.அத தெரிஞ்சுகிட்ட,நம்ம நிம்மதி போயிடும்.உனக்கு நடந்த மாதிரி" என்றபடி,அப்படியே போதையில் மயங்கி விழுந்தான்.மயங்கிய ராசுவை மெதுவாக இழுத்து,சுவரின் பக்கம் சாய்ந்தவாறு சாமி உட்கார செய்தான். அருகில் அமர்ந்து,முன்னாள் எம்எல்ஏ வின் ரகசியங்களை நினைத்து பார்த்து,
"நிறைய கூத்திய வச்சிருக்கான்.எவ்வளவோ திட்டத்துக்கு ஒதுக்கிய பணத்தை பதுக்கி வச்சுருக்கான்.அதுமட்டுமா அவன் பொண்டாட்டி அவனை கொன்னது தப்பு இல்ல...ச்சே...நான் தான் அந்த நேரத்தில அவசரபட்டேன்" என்று நினைத்து கொண்டிருக்க, வெளியே இருந்து இன்ஸ்பெக்டர் "சாமி" என்று அழைத்தார்.
எழுந்து வெளிய வந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.ஆறு பேர் வந்திருக்க,பயந்து போன சாமி.திரும்பி "ராசு அண்ணே" என கத்த,அதற்குள் வந்தவர்கள் வாயை பொத்தி, அழுக்கி,தயாராக இருந்த காரில் இழுத்து போட்டு ஓட்டி செல்ல,அரை போதையில் தள்ளாடியபடி எழுந்து,"சாமி......சாமி.." என்று கத்தியவாறு பின் ஓடி வந்தான் ராசு.ஆனால் அதற்குள் கார் மருத்துவமனையை கடந்து சாலையில் வேகமாக சென்றது.
அங்கு காவலுக்கு நின்ற ஏட்டு இருவரும் பத்து நிமிடத்திற்கு பின் அங்கு வந்தார்கள். " சார்,என்கூட இருந்த சாமிய, யாரோ கார்ல தூக்கிட்டு போறாங்க" என்று பதட்டத்தில் ராசு சொன்னான்.
"யோவ் அவனை யார்யா தூக்கிட்டு போற!" என்றார் ஏட்டு.
"சார், இப்பதான் சார் கார்ல வந்து இழுத்துட்டு போனானுங்க"
" என்னய்யா சொல்ற, உண்மைய தான் சொல்லுறீயா ?,இல்ல குடிச்சிட்டு உளறியா ?"
" அட ஆமா சார்,இந்தா... இந்த சிசிடிவி கேமரால கூட பதிவாகிருக்கும் சார்.அதுல பாருங்க சார்" என்று வாசலில் இருந்த சிசிடிவியை அடையாளம் சொல்லியபடி நின்றான்.
அறை வெளியே இருந்த சிசிடிவி கேமிராவை பார்த்து,ஏட்டுவுக்கு நடுக்கம் வந்தது. "சரியா! நான் இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்றேன்" என்று ஏட்டு சொல்லிவிட்டு, இன்ஸ்பெக்டருக்கு செல்போனில் போன் செய்து பேசிவிட்டு ராசுவிடம், "யோவ்,இன்ஸ்பெக்டர் சாமிய கூட்டிட்டு வந்துருவாரு..பேசாம போ" என்றார்.
"சார்,யாரு கூட்டிட்டு போனா?,இன்ஸ்பெக்டர் எப்புடி கூட்டிட்டு வருவாரு" என்று ராசு கேட்க,"டேய் போடா பேசாம" என்று ஏட்டு அதட்ட,பயந்து உள்ளே சென்றான்.
ராசு போன பின்,"யோவ் ஏட்டு,அந்த சிசிடிவி கண்ட்ரோல் அறைக்கு போய்,ரெக்கார்டு ஆனாத அழிச்சிட்டு வரேன்.அதுவரை பாத்துக்கோ" என்று சொல்லி,ஏட்டு கண்ட்ரோல் அறைக்கு சென்றார்.
"சாமிக்கு என்னாச்சோ! என்ற பதட்டம் இருந்தது.
காலையில் வேலை முடிந்தவுடனே,மீண்டும் ஏட்டுவிடம் சாமியை பற்றி கேட்டான் ராசு."அதான் வந்துருவான்னு சொன்னேன்ல" என்று மிரட்டும் தோனியில் சொன்னார்.
"மறுபடியும் சோதனையா ?,அவன் ஆளில்லா அநாத பய சார்.எதுனாலும் நான் தான் பாக்கனும்"என்று ராசு கண்கலங்க,"யோவ்,சாமிக்கு மறுபடியும் யோகம் அடிக்க போகுது.அதுகாக தான் அவன கூட்டிட்டு போயிருக்காங்க.நிறைய காசோட வருவான்னு" ஏட்டு சொல்லி,ராசுவ அனுப்பி வைத்தார்.
ஒரு நாள் ஆச்சு,இரண்டு நாள் ஆச்சு,மூன்று நாளும் ஆச்சு...அவனை பத்தி எந்த தகவலும் இல்லை."செத்த பிணத்து மேல சாமி கை வச்ச,அவங்களோட ரகசியத்தை சொல்லிடுவான்" என்று வாய் மொழிப் பேச்சாய் அவன் சட்டென சுற்று வட்டாரத்தில் பிரபலமாய் போனவன். ஊரில் முக்கியஸ்தர்கள் இறந்து போனால்,அதுவும் பணம்,சொத்து,பரம்பரை ரகசியம் இப்படி மறைத்து வைத்திருக்கிற ஆட்கள் இறந்து போனால் கூட, சாமியிடம் வந்து வேண்டி அவனை அழைத்துச் சென்றனர். உடன் ராசுவும் செல்வான். வேளை முடிந்தால் வெத்திலை பாக்கில் படி காசு ஐநூற்றி ஒன்னு வைத்து வணங்கி கொடுப்பார்கள்.ஊருக்கு ஓதுக்குபுறமாக நாலைந்து வீடுகளில் சாமி வீடும் ஒன்று.நடந்து செல்ல பாதை கூட இல்லை.ஆனால் சாமியை காண வரும் கூட்டத்தலே அங்கு பாதை ஏற்பட்டது.
அந்த பகுதி காவல்துறை மர்ம கொலை வழக்குகளிலும் சாமியின் உதவி கேட்கபட்டு தீர்க்கப்பட்ட கதையெல்லாம் உண்டு.
இந்த நடப்பை பார்த்து, "ஒரு காலத்தில் நம்மாள பார்க்கவோ,தொட்டு பேசவோ யோசிச்ச சனமே! நம்மள கையெடுத்து கும்புட்டு,நம்ம இடத்துக்கு வந்து கூட்டிட்டு போகுது" என்று ராசுவிடம் சாமி சொல்லி மகிழ்வான்.
போக போக உள்ளூர் வட்டாரத்தில் பிரபலமான சாமி,பின் மாவட்ட அளவில் பிரபலமாக தொடங்கி,"மனித கடவுள்,கடவுளின் அவதாரம்" என்று கொண்டாடி ஊரில் ஒரு சமூகம், எல்லையில் அவனை நிற்க வைத்து பூஜை செய்யத் தொடங்க,"பூஜ புனஸ்காரமெல்லாம் எதும் செய்ய வேணாம்.நானும் சாதாரண மனுசன் தான்" என்று அந்த சில சமூகம் இவனை வைத்து லாபம் பார்க்க நினைத்ததில் மண்ணை போட்டான்.
"போலி ஆசாமி" என்று அவதூறும் ஆங்காங்கு வரும்.
சாமி பற்றிய செய்தி பிரபல வாரப் பத்திரிகை ஒன்றுக்கு சென்றது. அவனைப் பற்றிய செய்தி சேகரிக்க நிருபர்கள் அனுப்பப்பட்டனர்.அரசு அதிகாரி ஒருவரின் கண்ணில் இந்தக் கட்டுரை பட்டு அது முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. முதல்வர் அதைப் படித்துவிட்டு, ‘இது சோதித்துப் பார்க்க வேண்டிய விஷயம். உண்மையா இல்லையா என்பதை ரகசியமாய்,ஆதாரபூர்வமாய் கண்டறியுங்கள்’ என்று உத்தரவிட, அரசாங்கக் குழு ஒன்று அடியாநத்ததில் முகாமிட்டது.
ஏறத்தாழ ஒரு மாதம் கழித்து அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில், "அந்தக் கிராமத்திலும்,சுற்றி இருக்கும் ஊரிலும் சிலர் மர்ம்மான முறையிலோ,சில முக்கியஸ்தர்களோ இறந்தால்,இவன் பிணத்தின் வலது கையை பிடித்து பார்த்தால்,உண்மை இவனுக்கு புலப்பட்டு,அதன் மூலம் ரகசியம் வெளிப்பட்டுள்ளது.இது மேலும் அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டும்" என்று கொடுத்தார்கள்.
பின் முதல்வரின் நேரடி உத்தரவின் பேரில் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று சாமியை சந்தித்தது. தங்கள் நோக்கத்தையும் முதல்வரின் உத்தரவையும் எடுத்துரைத்துத் தங்களுடன் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டது. சில பரிசோதனைகள் செய்ய வேண்டுமென்றும், தங்களுடன் சாமி சென்னைக்கு வர வேண்டுமென்றும் அந்தக் குழு கேட்டுக்கொண்டதன் பேரில் சாமி,ராசுவுடன் சென்னை கிளம்பினான்.
ஆராய்ச்சியாளர்கள் சாதாரணக் கண்காணிப்பிலிருந்து, ரத்தத்தையும் மூளையின் செயல்பாட்டையும் ஆராய்வது வரை எல்லா சோதனைகளும் செய்யப்பட்டன.அவனுக்கு எப்போதிலிருந்து இந்த சக்தி வந்தது என்ற மனோதத்துவ சோதனையும் செய்து ஒரு மாத தீவிர ஆராய்ச்சிக்குப் பின் ஆராய்சி குழு
"இவன் சாதாரண மனிதன் தான்" என்று தங்களின் அறிக்கைகளை சமர்ப்பிக்க,
அதிலும் சோதனை கூடத்தில் சில பிணத்தில் கை வைத்து பார்த்து சில கணிப்புகளும் தவறிய சம்பவங்கள் நடந்து,சில ஆர்வலர்கள் "இவன் போலி" என்று கேலி செய்து வறுத்தெடுத்த நிகழ்வும் நடக்க தொடங்கி,அந்த நேரத்தில் முதல்வருக்கும் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்க,"இவன் போலிதான்,சாமி சோதனையை கைவிட்டு அவனுக்கு பாதுகாப்பு தளர்த்தி அவனது கிராமத்திற்கே அனுப்பி வைக்க" சோதனை குழுவுக்கு துணை முதல்வர் உத்தரவிட்டார்.
"மத்தவங்க ரகசியத்தை தெரிஞ்சு,எனக்கு நிம்மதி இல்ல. தெரிஞ்ச ரகசியத்த நான் சரியான ஆளுக்கு சொல்லுறனா ?,இல்லையான்னே! தெரியல.அதான் சோதனையில கூட நான் வேணும்னு தப்பா சொன்னேன்.அதுனால, 'என்னைய போலின்னு' சொல்லிட்டாங்க. இனி நான் யார் ரகசியத்தையும் பார்க்க மாட்டேன்" என்று ராசுவிடம் சாமி சொல்லி வருத்தபட்டு,தனது பிணவறை சிப்பந்தி பணியை தொடர்ந்தான்.ஆனாலும் ஊரில் சிலர் இவனை விடுவதாக இல்லை.அவ்வப்போது ஊரர்கள் அழைக்க,"ஊர் பகை வேண்டாம்" என்று போய் கொண்டு தான் இருந்தான்.
இரவில் தன் வீட்டின் திண்ணையில் சாமியை நினைத்து கண்ணீர் சிந்திய ராசுவை பார்த்து, "யோவ்! என்ன ராசு,சாமி வந்தனா ?" என்று பக்கத்து வீட்டு செந்தில் விசாரித்தபடியே,தனது சைக்கிளை நிறுத்தி,சைக்கிளில் மாட்டியிருந்த கட்சி கொடியை எடுத்தான்.
"ம்....ஆளையே காணாம்" என்றபடி கண்ணீரை துடைத்து,செந்திலை பார்த்து,"நீ எங்க கட்சி கூட்டத்துக்கு போயிட்டு வந்தீயா" என்றான் ராசு.
"கூட்டமெல்லாம் இல்ல.முதல்வருக்கு உடம்பு முடியாம ஆஸ்பத்திரியில இருக்காருல,அவருக்கு நல்லா ஆகுறதுக்கு,நம்ம ஊர் பெருமாள் கோவில்ல பூஜ,அதுல கலந்துக்க கூப்புட்டாங்க.இநூறு ரூபா குடுத்தானுங்க.அதான் போயிட்டு வந்தேன்" என்று சொல்லி கொண்டே,திண்ணையில் ராசு பக்கத்தில் அமர்ந்தான்.
"கடவுள் இல்லன்னு சொல்லுற கட்சி.அவங்க நல்லா இருக்க கோவில் பூஜக்கு கூப்புடுற கட்சி எம்எல்ஏ.என்ன ஏதுன்னு கேட்காம கடைசிவரைக்கும் இருநூறு ரூபாவுக்கு போற,உன்ன மாதிரி ஒரு தொண்டன்.'ம்.......நல்ல ஆட்சி'" என்று சலித்தபடி ராசு சொல்ல, "வேற என்னா பண்ணுறது,உனக்கு மாதிரி கவர்மெண்ட் வேல இருந்தா செய்யலாம்!,எனக்கு அந்த வேல இல்ல.அதான் கூப்புடுற பக்கம் போவேன் காசு வாங்குறேன்" என்று சொல்லி பீடியை பற்ற வைத்து இரண்டு இழு இழுத்து, " சரி,வரேன்.நாளக்கும் பூஜ இருக்கு.கூட்டத்தில நிக்க கூப்புட்டுருகாங்க" என்று சொல்லி செந்தில் எழுந்திருக்க,"சரி,முதலைச்சருக்கு எப்புடி இருக்காம்.நியூஸ்ல என்ன சொன்னாங்க" என்றான் ராசு.
"ஏதோ,நல்லா இருக்காம்.வடை சாப்புட்டாங்களாம்.நியூஸ்ல அமைச்சர் பேட்டி குடுத்தாங்க" என்று சொல்லி கிளம்பினான்.
ராசு அப்படியே,திண்ணையில் மலக்க சாய்ந்து கிடக்க,யாரோ தூரமாக இருந்து ராசுவை அழைப்பது போல தெரிந்தது.இருளில் கருப்பு உருவத்தை பார்த்து, சட்டென்று பயந்து,உடல் சிலிர்த்து போக,யாரென்று உற்று பார்த்தான். சாமி குத்துயுரும்,கொலையுருமாக ரத்த வெள்ளத்தில் தட்டு தடுமாறி வந்தான்.அவனை பார்த்து "சாமி,என்னைய்யா ஆச்சு உனக்கு" என்று கதறியபடி ஓடி போய் சாமியை தாங்கி பிடிக்க,மெதுவாக ராசுவின் வாயை பொத்தியபடி,"எதுவும் பேசாத,அமைதியா இருண்ணே!.மொத உள்ள போய் பேசிக்கலாம்" என்றான் சாமி.
உடலில் இரத்தம் சொட்ட சொட்ட சாமியை தாங்கி பிடித்தபடி வீட்டின் உள்ளே கொண்டு சென்று,கதவை தாழிட்டான் ராசு.பின் எரி விளக்கை அனைத்து எண்ணெய் விளக்கை ஏற்றி,குவளையில் தண்ணீர் எடுத்து வந்து குடிக்க குடித்தான்.பெட்டியில் இருந்த பஞ்சை எடுத்து சாமியின் இரத்ததை துடைத்து,சுத்தம் செய்தபடியே,"யாரு சாமி,அந்த செத்து போன எம்எல்ஏ வோட குடும்பம் தான் உன்னைய இப்படி பண்ணாங்களா ?"என்றான்.
"இல்லண்ணே!,அவங்க இல்ல....." என்று சாமி மூச்சு விட முடியாமல் விட்டான்.அவனின் நிலை உயிர் போகும் நிலையில் இருந்தது.
"சாமி! பயங்கரமா அடிபட்டிருக்கு,நான் செந்திலையும் கூப்புடுறேன்.உன்ன தூக்கிறோம். ஆஸ்பத்திரி போயிடலாம்" என்றான்.
"வேணாம்னே!, நான் உயிர் பொழக்க மாட்டேன்"
"அப்புடி சொல்லாத சாமி" என்று கண்ணீர் விட்ட ராசு,சாமியை அப்படியே தூக்கி தோளில் போட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓட,சாமிக்கு உயிர் இழுத்து ஊசலாட தொடங்கியது.
சாமியின் வலதுகை பின் வழியாக ராசுவின் கையை பிடித்தபடி கிடந்தான். சாமியை ராசு தூக்கி கொண்டு ஓடுவதை பார்த்து,"சாமிக்கு என்னாச்சுன்னே!"
என்றவாறு செந்தில் பின் ஓடி வந்தான். அசுர வேகமாக ஐந்து நிமிட ஓட்டத்தில் ஆஸ்பத்திரியை அடைந்தான்.அங்கிருந்த ஸ்ட்ரெச்சரை வேகமாக இழுத்து சாமியை அதில் போட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு இழுத்து ஓட,சாமி உயிர் பிரிந்தது.
அங்கிருந்த மருத்துவரும் வந்து சாமியின் இதய துடிப்பு,நாடி துடிப்பு பார்த்து,"உயிர் போய் அஞ்சு நிமிஷம் ஆச்சு" என்று சொன்னார். ராசு கதறி அழுதான்.
சாமி தன் கையை இறுக்கபிடித்த அச்சு,இரத்த கறையை பார்த்து கண்ணீர் விட்டு,சாமியின் உள்ளங்கையை பிடித்தான்.ஒளி தாக்கியது போல லேசான நடுக்கம் ராசுவுக்கு ஏற்பட்டு,சற்று கண்களை மூடி அப்படியே நின்றான்.
சட்டென்று,"அய்யோ..." என்று அலறல் சத்தம் அறை முழுதும் கேட்க,பிணத்தின் கையை விட்டு,பொத்தென்று பதறி கீழே விழுந்தான் ராசு.திரும்பி பார்த்தால்,வேறு பெண் கணவன் இறந்த சோகத்தில் கதறினாள். திரும்பி சாமியின் முகத்தை பார்த்த ராசுவிற்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மீண்டும் சாமியின் கையை பிடித்து கண்மூடி நின்றான் ராசு.சாமியை கடத்தி சென்று என்னென்ன செய்தார்கள் என ராசுவுக்கு தோன்ற ஆரம்பித்தது.
காரில் கடத்தி சென்ற சாமியை,கண்ணை கட்டியவாறு ஓர் இடத்திற்கு அழைத்து போனார்கள்.அது என்ன இடம் என்று சாமியால் கண்டுபிடிக்க முடியவில்லை.அங்கிருந்து கண் கட்டபட்ட நிலையிலேயே வேறு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, இரண்டு நாள் தனி அறையில் வைக்க,பின் மீண்டும் அழைத்து போய் ஒரு ஏசி அறைக்குள் நுழைந்தார்கள்.ஆனால் சாமியின் கண்கள் கட்டபட்ட நிலையிலே இருக்க,சட்டென்று "டேய்,இந்த பொணத்துல கை வச்சு பாரு" என்று அதட்ட,பயந்து போய் தட்டு தடுமாறி பிணத்தின் கையை பிடித்தான்.ஆனால் "இந்த குரலை எங்கயோ,கேட்டது போல இருக்கே!" என்று சந்தேகம் இருந்தது. கையை பிடித்து யோசித்த போது,இறந்தது முதல்வர் தான்.அதுவும் உடல்நலம் குன்றி அவர் இறக்கவில்லை.சிலர் தாக்கி,அவர் இறந்த சம்பவம் வந்தது. நடுங்கி போய் நின்றபடி,"அய்யோ,முதல்வரை கொலை செய்த கும்பல் தான் என்ன சுத்தி நிக்குது.ரகசியத்தை சொன்னாலும்,சொல்லாட்டியும் என்னைய கொன்னுடுவாங்களே!" என்ற பயத்தில் நின்றான்.அதுவும் ஊழல் செய்து பதுக்கிய சொத்து மதிப்பு ஏராளமாக வர,"என்ன சொல்ல" என்று தின்றினான்."டேய்,என்னடா தெரிஞ்சது" என்ற அதட்டல் குரல் கேட்க,
நடுங்கியவாரே! "எதுவும் வரலங்க.பணம்,சொத்து இருக்கதும் தெரியல" என்றான்.
"டேய்,பொய் சொல்லுறீயா" என்று சாமியின் கன்னத்தில் அறை விழுந்தது.
அழுதபடியே,"ஐய்யா,சத்தியமா தெரியல" என்றான்.
"தம்பி! முதல்வர் ரொம்ப மோசமான ஊழல் கொடுங்கோல்வாதி,அவங்க பதுக்கியிருக்க பணத்தை வச்சு தான், ஏழை,எளிய மக்களுக்கு உதவ முடியும்" என்று பெண் குரல் சாந்தமாக கேட்க,சற்று நேரத்தில் அமைதியாக இருந்தான் சாமி.
மீண்டும் மீண்டும் அந்த பெண் சாந்தமாக சொல்வதை கேட்டு,சாமி மனம் இளகினான்."அதுவும் கட்சி முக்கிய ஆள் அக்கா குரல் மாதிரி இருக்கே!"என்று நினைத்தான்.அந்த பெண் குரல் மீண்டும் இவனிடம் அன்பாக பேச, "இங்கு இருப்பது வேறு கும்பல்,முதல்வரை கொன்ற கும்பல் வேறு போல" என்று இவனாக நினைத்து கொண்டு ,முதல்வர் கொலை செய்யபட்டது தொடங்கி,வெளிநாட்டில் பதுக்கிய பணம் வரையுள்ள ரகசியத்தை சொல்லி முடிக்க,அறையே நிசப்தம் நிலவ,சட்டென்று அறையிலிருந்து இழுத்து செல்லபட்டான்.
பின் காரில் ஏற்றி,அடியாநத்தம் வரும் போது,ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி அவனை வெளியே இழுத்து போட்டு,சாரமரியாக வெட்டி,கண் கட்டை அவிழ்த்து விட்டு போனார்கள்.சில நிமிடங்களில் லேசான உயிர் ஊசலாடிய நிலையில் வீட்டு பக்கம் வந்து ராசுவை பார்த்தான்.
ராசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் போது, சாமியின் இரத்த கறையுள்ள உள்ளங்கை ராசுவின் கை பிடித்த சமயத்திலே, ரகசியத்தை பார்க்கும் சக்தி,ராசுவுக்கு வந்தது.
தனக்கிருந்த ஒரே ஆறுதல் சாமி,இறந்ததை தாங்காமல் ராசு அழுதபடி,"மத்தவங்க ரகசியத்த தெரிஞ்சுகிட்ட நிம்மதியா வாழ முடியாது.உன் சாவு ரகசியம் தெரிஞ்சு,இனி நான் நிம்மதியா இருக்க முடியாது.ஆனால் நான் இத ஊர்காரங்க கிட்ட சொல்லி,அவங்கள ஜெயில்ல கம்பி என்ன வைக்கிறேன்" என்று நினைத்து கொண்டிருக்க,மருத்துவமனையிலிருந்து போலீஸ்க்கு தகவல் கொடுத்து, அவர்கள் அங்கு வந்து,சாமி பிணத்தை பார்த்துவிட்டு,ராசுவிடம்,"யார்ரா இவனை வெட்டுனது?,எப்புடி செத்தான் " என்று கேட்டனர்.
சாமி எப்படி இறந்து போனான் என்ற ரகசியம் தெரிந்த ராசுவும்,கண்களை துடைத்து, "முதல்வர் கூட இருக்க,அக்கா சொல்லி தான் சாமிய வெட்டிருகாங்க" என்றான்.
"டேய்,என்ன ஒலறியா!" என்று இன்ஸ்பெக்டர் அதட்டினார்.
தைரியமாக,"உளரல,உண்மைய தான் சொல்லுறேன்" என்றான்.
"உனக்கு எப்புடி தெரியும்" என்றார்.
"சாமி கையில,என் கை வச்சு ரகசியத்தை தெரிஞ்சுகிட்டேன்"
கோபமாக,"என்னடா! காமெடி பண்ணுற,அக்கா எதுக்கு சாமிய கொல்லுறாங்க" என்றார்.
"அவங்க முதல்வரையே கொன்னுட்டாங்க.அத தெரிஞ்ச இவனையும் கொன்னுட்டாங்க" என்று கம்பீரமாக பேச,இன்ஸ்பெக்டர் எரிச்சலாகி,"முதல்வரே,காலையில பொங்கல் சாப்புட்டதா நியூஸ்ல சொல்லுறாங்க.நீ செத்துட்டதா சொல்லுறீயா!"என்று
அவனை ஓங்கி அடித்து,கீழே தள்ளினார்.
அங்கு வந்த ஏட்டு,"சார்,சாமிய இவன் தான் வீட்டுக்குள்ள வச்சு வெட்டி கொன்னுடுக்கான்.இதே ராசு வீட்டுல இருந்து கைபத்தின அருவா" என்று இரத்தம் வடிந்த அரிவாளை கைகுட்டை வைத்து பிடித்தபடி காட்டினார்.
"திருட்டு பய,என்னமா கத விடுறான்" என்று கீழே கிடந்த ராசுவை மிதித்து கைல விலங்க மாட்டு" என்று ஏட்டிடம் சொன்னார் இன்ஸ்பெக்டர்.
தன் பக்கம் கொலை வழக்கு திரும்பியதை சற்றும் எதிர்ப்பார்க்காத ராசுவுக்கு கைவிலங்கு போட்டு,அடித்து இழுத்து செல்ல, மருத்துவமனை வரவேற்பறை தொலைக்காட்சி செய்தியில் "முதல்வர் நலமாக உள்ளார்.மாலையில் டீ குடித்தார்" என்று கட்சி முக்கிய ஆட்கள் நிருபரிடம் பேசிய காணொளி ஒளிபரப்பானது.
அதனை பார்த்தவாறு, "இனி நாடு உன் கையிலயா!" என்றவாறு ராசு நினைக்க,அவனை போலீஸ் வண்டியில் அடித்து ஏற்றினார்கள்.
கார்த்திக் கிருபாகரன்
Super story
ReplyDeleteநன்றி ❤❤
DeleteInteresting one
ReplyDeleteThanks for your support
Delete