தண்ணீர்

அசோகமித்திரன் அவர்களின் "தண்ணீர்" நாவல்  வாசிக்க ஆர்வம் ஏற்பட்டு,புத்தகம் வாங்கி இன்று பயணத்தில் வாசிக்க தொடங்கினேன்.சில மணி நேரத்தில் படித்து முடித்துவிடக் கூடிய் நாவல். ஆனால் அது தரும் தாக்கம் அதை அப்படி எளிதில் கடக்கவிடாது.


சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டு தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை தண்ணீர் பிரச்சனையோடு சேர்த்து கூறப்பட்டுள்ளது. 

"யாரோ ஒரு பெண் தண்ணீருக்காக இங்கும் அங்கும் அலைந்ததை தொடர்ச்சியாக பார்த்ததன் விளைவு இக்கதை உருவாக்கம்" என்கின்றார் அசோகமித்திரன்.
 

சினிமா கதாநாயகியாகும் கனவுடன் வாழும் ஜமுனா.ஆசை நிராசையாகிறது. பாஸ்கர் என்பவரால் ஏமாற்றப்படுவது,சுற்றி இருக்கும் மனிதர்களால் ஒதுக்கவும் படுகிறாள். ராணுவத்தில் பணிபுரியும் கணவனை பிரிந்து பெண்களுக்கான விடுதியில் தங்கி, பல விதமான நெருக்கடியில் பிழைக்கும் ஜமுனாவின் தங்கை சாயா.

 நோய்வாய்ப்பட்ட கணவனுக்கும், வன்மத்தின் மறு உருவமான மாமியாருக்கும் இடையில் நம்பிக்கையின்றி மன உறுதியுடனும், விரக்தியுடனும் காலம் தள்ளும் டீச்சரம்மா.
இவர்களின் வாழ்க்கை போராட்டத்தையும்,தண்ணீரோடு பொருத்தி நகரத்துகிறார்.

கதை ஒரு ஆரம்பம், ஒரு முடிவு, திடுக்கிடும் திருப்பங்கள் என்றெல்லாம் கிடையாது. சம்பவங்களின் கோர்ப்பு. கதாபாத்திரங்கள் பற்றி விவரிப்பு எல்லாம் கிடையாது. சம்பவங்களின் மூலமும், அவர்களின் உரையாடல் மூலமும் அது சொல்லப்படுகின்றது. ஜமுனா ஏன் அப்படி ஆனால் என்பதெல்லாம் நம் யூகத்திற்கு விடப்படுகின்றது. அதே போல் கதை ஜமுனாவிற்கு உதவும் டீச்சர் கதபாத்திரம்  45 வயது சீக்காளிக்கு 15 வயதிலே குடும்பத்தினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டு நகரும் டீச்சரம்மா கதை. மற்றவர்கள் கதை சுருக்கமான உரையாடல். 

மக்கள் தண்ணீருக்கும் பட்ட அவஸ்தையை அப்படியே சித்தரித்துள்ளார். அடுத்தவர் வீட்டிற்கு சென்று கொஞ்சம் அவமானப்பட்டு தண்ணீர் சுமந்து வருவது, தண்ணீர் கொண்டுவரும் ஓட்டுனர் அதற்காக பெற்றுக் கொள்ளும் கப்பம். மழை இரவில் மழைத்தண்ணீருக்கு வரும் சண்டை அனைத்தும் இயல்பானவை. 

அரசு இயந்திரத்தின் செயல் அழகு, ஒரு வேலையை செய்யும் போது முடிந்த வரை ஏற்கனவே செய்யப்பட்ட வேலைகளை கெடுப்பது, பொது ஜனங்களுக்கு அவர்கள் தரும் மரியாதை, வேலையின் மெத்தனம் என நடுத்தர மக்கள் அரசு இயந்திரத்தால் படும் அவஸ்தையை கண் முன் காட்சிபடுத்துகின்றார்.

தண்ணீர் சமூகத்தின் இயல்பை பற்றிய சிறப்பான படைப்பு.

கார்த்திக் கிருபாகரன்

Comments

Popular posts from this blog

ஆலமரம்