வாழ்க வாழ்க

வாழ்க வாழ்க - இமையம்்




"என் உயிரினும் உயிரான,உடலினும் உடலான,என் உயிர் மூச்சினும் மேலான வாக்காளப் பெருங்குடி மக்களே,(மக்களால் நான், மக்களுக்காக நான்) பிரதான கழகத்தின் கூட்டத்திற்கு மக்களை அழைத்து செல்ல ஆட்களை சேர்க்கின்றனர்.அதில்
பேரனின் மருத்துவ செலவுக்காக  உள்ளூர் கட்சி பிரமுகர் வெங்கடேச பெருமாளிடம் பணம் பெற்றுக் கொண்டு கட்சி கூட்டத்திற்கு வருகிறாள் ஆண்டாள்.அவளோடு  கண்ணகி,சொர்ணம் என தெரு மக்கள் புறப்பட்டு பிரதான கட்சியின் பொதுக் கூட்டத்திற்கு செல்கின்றனர். அங்கு திடலில்  பெரும் கூட்டம் திரண்டிருக்கிறது.ஹெலிகாப்டரில் பத்து மணிக்கு வர வேண்டிய தலைவி வருவதற்கு தாமதமாகவே,மக்கள் கூட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை அரசியல் பின்னணியோடு, அவர்க்கே உரித்தான  மொழிநடையோடு அற்புதமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர் இமையம்.

நாவலில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண் அப்பெரும் கூட்டத்தில் சேரில் அமர்ந்து இருப்பதை கண்ட மூன்று உயர் சாதி பெண்கள் அவளை அங்கிருந்து அப்புறப்படுத்த  முயன்றபோது, அப்பெண் "ஓட்டு போட நான் வேணும்! சேர்ல மட்டும் உட்காரக்கூடாதா ?" என கேட்கும் கேள்விகள் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின்  குரலாய் அழுத்தமாக வெளிவருகிறது அந்தக் குரல். மற்றுமொரு இடத்தில் பெண்களுக்கு நடக்கும் சேர் சண்டை.  சொர்ணத்தின் பேத்தி  காயத்ரி 'சிறுநீர் போகவேண்டும்' என கேட்கும்போது கூட்டத்தில் போகவும் வழியில்லாமல், ஒதுங்க  கழிவறையும் இல்லாமல் தவிக்கும் போது, “காலத்துக்கும் நடுத்தெருவில் நாய் மூத்திரம் வுடுற மாதிரி கண்ட  இடத்தில் வேட்டிய தூக்கி வுட்டுட்டு போற பயலுவதான!, அவனுவளுக்கு எப்படி தெரியும் பொட்டச்சியோட கஷ்டம்? என்று சிறுநீரில் கூட உள்ள பாலின பாகுபாட்டை  எடுத்துரைத்துள்ளார். வெகுநேரமாகியும் தலைவி வராததால் வெயில் நேரத்தில் உடல் புழுக்கத்தாலும், குடி தண்ணீருக்கும்,சோற்றுக்கும் படும் வேதனையும்,தவிப்பும்.
வெகு நேரம் சிறுநீர் கழிக்க இயலாமல் பெண்கள் வேறுவழியின்றி இருந்த இடத்திலேயே சிறுநீர் கழிப்பதும் படிக்கும் போதே வேதனையாக்குகிறது.

இதில் ஒரு பிரதான கட்சியையும்,அதன் கூட்டத்தில் நடக்கும் கலோபரங்களை மட்டும் கூறியிருக்கிறார்.

ஆனால் நடைமுறையில் அம்மா கட்சி,அப்பா கட்சியில் தொடங்கி நேற்று முளைத்த கட்சிகள் வரை கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆடு,மாடுகளை ஏற்றி செல்லது போல கூட்டி செல்கின்றனர்.
சிறுவயதில் கேள்விப்பட்டதுண்டு அண்ணா அவர்களின் பேச்சைக் கேட்க பெருந்திரளான மக்கள் கூடியிருப்பார்கள் என்று. ஒருமுறை இரவு பத்தரை மணிக்கு அண்ணா அவர்கள் கூட்டத்திற்கு தாமதமாக வர நேர்ந்தது. அப்போதும் கூட அவர் பேச்சை கேட்பதற்காக வெகுநேரமாக மக்கள் பெரும் திரளாக காத்திருந்தனர். அவரும், "மணியோ பத்தரை. உங்களுக்கோ நித்திரை. போடுங்கள் உதய சூரியனுக்கு உங்கள் முத்திரை" என பேசி முடித்துள்ளார். அதன்பிறகு பலரின் பேச்சை கேட்க கூட்டம் கூடி இருப்பதாக கேள்விபட்டிருக்கிறேன். அதிலும் வைகோ அவர்களின் பேச்சு, எம்ஜிஆர் அவர்களை பார்ப்பதற்காகவே கூட்டம் கூடும் என்பார்கள். அதன் பிறகு இன்றுவரை கட்சி கூட்டங்களில் முக்கால்வாசி கூட்டம் பணம் கொடுத்து மக்களை அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர். இது ஒரு கட்சிக்கு மட்டும் விதிவிலக்கல்ல. ஆசிரியர் இமையம் அவர்களுக்கு உங்கள் ரசிகனின் அன்பும்❤️, வாழ்த்துக்களும்...

கார்த்திக் கிருபாகரன்

Comments

Popular posts from this blog

ஆலமரம்