பெத்தவன்

பெத்தவன் - இமையம்




பெண்ணைப் பெத்தவனின் பார்வையில் கதை நகர்கிறது.

தவமிருந்து இருபது வருடங்களுக்குப் பிறகு பழனிக்கு பாக்கியம் பிறக்கிறாள். பாக்கியத்திற்கு பிறகு செல்வராணி.  பாக்கியம் கல்லூரி கடைசி வருடம் படிக்கும் பொழுது கீழ் சாதியைச் சேர்ந்த பெரியசாமியை காதலிக்கிறாள். இதை ஊரார் மூலம் அறிந்து கொள்கிறான் பழனி. பாக்கியத்தையும் கண்டிக்கிறார்.
தேர்வுக்கு மட்டுமே அனுமதிக்கிறார்கள். சில நாட்களிலேயே திருமணத்திற்கும் ஏற்பாடு செய்கிறார்கள். அப்போது  முதல் முறையாகத்  தற்கொலைக்கு முயற்சிக்கிறாள் பாக்கியம்.
இரண்டாவது முறை பாக்கியத்தை பற்றி பழனி வேறு ஒருவர் மூலமாக கேள்விப்படும் பொழுது  மீண்டும் கண்டிப்பு, மீண்டும் ஒரு திருமண ஏற்பாடு இரண்டாவது முறையும் தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள்.
இவர்களின் காதலுக்கு அந்த ஊரில் இருக்கும் ஒரே உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். பழனியிடம் அவர்கள்  அவன் மகளை கொன்று விடச் சொல்கிறார்கள். ஒருமுறை பிரச்சினை அதிகமாகி பாக்கியத்தின் வாயில் ஊரார்கள் சாணியை கரைத்து ஊற்றி தகாத வார்த்தைகளால் பேசி தலை முடியையும் அறுத்து விடுகிறார்கள்.
இவ்வளவு கொடுமையும் தாங்கிக்கொண்டு பாக்கியம் வேறு திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இரண்டு முறை திருமண ஏற்பாடுகள் நடந்தும் பாக்கியம் ஒத்துக் கொள்ளாததால் திருமணம் நடக்கவில்லை. 
முடிவில் இந்த முறை கண்டிப்பாக உன் மகளை நீ கொல்ல வேண்டும் என்று ஊரார் கூறுகிறார்கள்.  'நாளை பாக்கியம் உயிரோடு இருக்க மாட்டாள்' என்று ஊரார் முன் சொல்லி பஞ்சாயத்து முடிகிறார் பழனி.

அன்று இரவு பழனி, சாமியம்மா,துளசி,பாக்கியம், செல்வராணி, அவர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடலும்,உணர்வுகளும், சம்பவங்களும் தான் மீதி கதை.

 பஞ்சாயத்தை அதில் வரும் உரையாடலும்  உணர்வு பூர்வமாக காட்சிமொழியாக கண்முன் எழுத்தாளர் வரிகளில் கொடுத்துள்ளார்.அவருக்கு என் அன்பும்,வாழ்த்துக்களும். 

காலம் எவ்வளவு மாறினாலும், சாதிகளும்,அதன் தாக்கங்களும் மாறுமா ?
ஒருவன் தன் பெயரை,ஊரை,ஏன்  மதத்தைக் கூட மாற்றிக் கொள்ளலாம். ஆனால் சாதியை மாற்றிக் கொள்ள முடியுமா ? 
இது ஒரு துளியில் மறையாது. எத்தனையோ சாதி,மதம் பார்க்காத  காதல்கள் தோன்றினாலும், அதன் முடிவு கொலைகளில் முடிந்தாலும் மீண்டும், மீண்டும் காதல் பிறந்து கொண்டுதான் இருக்கிறது. ஆணவக் கொலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கதையில் பஞ்சாயத்து நிகழ்வில் எதிர் தரப்பினரின் (கீழ்சாதிகாரர்களின்) பங்களிப்பையும்,அவர்கள் தரப்பு கருத்துக்களையும் விவரித்திருந்திருக்கலாம்.தன்னால் தன் குடும்பத்தின் நிலையும்,ஊராரின் அவ சொல்லுக்கு பழிகடா ஆவது தெரிந்தும் கல் நெஞ்சாக இருக்கும் பாக்கியத்தை ஊர் மக்களால் சாணி கரைத்து ஊற்றி,தலை முடியை அறுத்து அவமானப்படுத்தும் நிகழ்வு,கதை முடிவு வாசிப்பவருக்கு மிகுந்த கணத்தை உண்டாக்குகிறது.

கார்த்திக் கிருபாகரன்

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆலமரம்