தண்ணீர் தண்ணீர்

 

அரசியல்வாதிகளை பகைத்து கொள்கிற, அரசு அதிகாரிகள் நிறைய பேரை, "உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன்னு" சொல்லி பயமுறுத்துவார்கள்.
அந்த தண்ணி இல்லாத காடுகளில் ஒன்றுதான் எங்க ஊர் மணப்பாறை



குடகிலே பிறந்து வரும் காவிரி, பாய்ந்து செல்கின்ற பாதையெல்லாம் பொன் விளையும் பூமியாக மாறும்.அப்படி அகண்ட காவிரிக்கரையில், குடிக்கொண்ட அரங்கநாதர் சுவாமி கோவில் உள்ள,வளம் செழிக்கின்ற திருச்சி மாவட்டத்தில் இருக்கிற எங்க ஊர் மிக முக்கிய ஒரு நகராட்சி. தமிழ்நாட்டுக்கு மத்தியில் தான் இருக்கும் திருச்சி மாவட்டத்துக்கு மத்தியில் தான் மணப்பாறை இருக்கு. திருச்சியிலிருந்து 35 கிலோ மீட்டர் பயணதூரம். ஆனால் இங்க நிறைய தண்ணீர் பஞ்சம் இருக்கு. "மணப்பாறையில் இருந்து பொண்ணு எடுப்பார்கள். ஆனால்  பொன்னு கட்டி கொடுக்கமாட்டாங்க" என்பார்கள். காரணம் தண்ணீர் பஞ்சம்.1975 காலகட்டத்தில் இரயில்களை நிறுத்தி,அதிலிருந்து தண்ணீர் எடுக்கும் அளவிற்கு தண்ணீர் பஞ்சம் வாட்டி வதைத்துள்ளது. அதனாலே,வீட்டில் தண்ணீரை வீணாக்கினால் கோபம் ஏற்படும். மணப்பாறையில் அரசாங்கம் நிறைய திட்டங்கள் கொண்டு வந்து வீடு,வீட்டுக்கு காவிரி தண்ணீர் குழாய் இணைப்பு கொடுத்து தண்ணீர் வர வச்சாங்க. ஆனாலும் எங்கள்  பிள்ளையார் கோவில் தெரு பகுதி மேட்டுபகுதி என்பதால்
அங்க தண்ணீர் இணைப்பு கொடுத்தும் அதிக அளவு தண்ணீர் வரவில்லை.

நாங்க இருக்கிற பகுதி உயரமான மேட்டு பகுதி. அந்த பகுதிக்கு காவிரி தண்ணீர் வருவது.ரொம்ப ரொம்ப அரிதான விஷயம்.பிறகு வருவது முற்றிலுமாக குறைந்தது.

நான் நிறைய  முறை நகராட்சிக்கு சென்று மனு கொடுத்து, காவிரித் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்ய சொல்லியிருந்தேன்.ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
ஒருமுறை நகராட்சி புகார் பெட்டியில்
"காவிரி தண்ணீர் வரவில்லை.இதோடு பலமுறை மனு எழுதி போட்டேன்.அரசு அதிகாரிகள் தயவு செய்து வந்து பாருங்கள்.இல்லையென்றால் அடுத்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் "என்று எண் பெயரோடு எழுதிப்போட்டேன்.
ஒரு மாத காலம் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்."ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சொன்னாங்க.ஆனால் அதுவும் செய்யவில்லை.அரசு இயந்திர செயல்பாடுகளை பார்க்கும் போது வருத்தமளித்தது.
அப்போது தான் வீட்டு வரி, தண்ணீர் வரி கட்ட நகராட்சியிலிருந்து அறிவிப்பு வந்தது.
ஆனால் வீட்டு வரி கட்டினோம்.தண்ணீர் வரி கட்டவில்லை.நகராட்சி அலுவலகத்திலிருந்து வந்து "தண்ணீர் வரி கட்டுங்க.இல்ல கனெக்‌ஷனை புடுங்கிடுவோம்" என்று சத்தம் போட்டாங்க.
அவர்களை பார்த்து, "வராத தண்ணீக்கு ஏன் வரி கட்டனும்.வீட்டுக்கு தண்ணீர் வரட்டும்.உடனே வரி கட்டுறேன்" என்று சொன்னதும்,
"தண்ணி வரலைன்னா,மனு எழுதி குடுங்க.வந்து பார்ப்பாங்க.குழாய்ல பிரச்சினை இருந்த சரி பண்ணுவாங்கன்னு" சொன்னார்.
உடனே,என்னோட செல்போனிலிருந்து ஒரு ஏழு மனு எழுதி,அது குடுத்தப்ப எடுத்த போட்டோவை காட்டினேன்.
அதை பார்த்தவர் எதுவும் பேசாம போனார்.
5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லை. சரி கூட்டத்தை சேர்த்து போராட்டம் செய்ய என் பக்கத்து வீட்டில் உள்ளவர்களோடு சேர்ந்து முடிவு பண்ணினோம். அப்போ ஒவ்வொரு வீட்டுக்கும் போயி, ஒவ்வொரு தாய்மார்களும் போராட்டத்துக்கு வர கூப்பிட்டோம்.அப்போ அவங்க சொன்ன ஒரு விஷயம், "அட போப்பா எத்தனை தடவைதான் போராட்டம் போராட்டம் அவரவர் வேலைய பார்ப்போம். லாரி தண்ணி வாங்கிக்க வேண்டியதுதான். வாரத்துக்கு குடிக்க ஆரோ வாட்டர் வாங்க வேண்டியதுதான். இனிமே நாங்க போராட்டத்துக்கு வரமாட்டோம் எங்கள கூப்பிடாத அப்படின்னு" என்கிட்ட சொன்னாங்க.

"போராட்டத்துக்கு வந்த வெற்றி கிடைக்கும் ன்னு" பக்கத்து வீட்டும்மா நம்பிக்கை கொடுத்து,எல்லாரும் சேர்ந்து நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினோம்.

நகராட்சி பொறியாளர் நேரடியா வந்து பேசி, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதா உறுதி சொன்னார்.ஒருவழியாக தீர்வு ஏற்பட்டு இப்போது வீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குழாய் இணைப்பு வழியாக பத்துக்குடம் காவிரி குடித்தண்ணீர் கிடைக்கும்.ஆனால் அதை பெற நாங்க  நகராட்சி அலுவலகத்தில் பெரும் போராட்டம் செய்து பெற்றது தான் வேதனை.

2003 ஆம் ஆண்டு மழை நீர் சேகரிப்புத் திட்டம் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது.அதன் மூலம் நாடு முழுவதும் அனைவரின் வீட்டிலும் மழைநீர் தொட்டி அமைத்தனர்.மாடியில் விழும் தண்ணீர் குழாய் வழியாக சாக்கடை நீரோடு கலக்காமல் அதனை மழைநீர் தொட்டி மூலம் பூமியில் சேகரிப்பதால்,நிலத்தடி நீர் மட்டம் உயரும்.போர் குழாய் இணைப்பு பயன்படுத்தும் வீடுகளுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ள திட்டம்.


ஆனால் 17 வருடங்கள் நிறைவு பெற்றது. எங்கள் தெருவில்,அந்த மழைநீர் சேகரிப்புத் தொட்டி, எங்கள் வீட்டில் மட்டும்தான் உள்ளது. மீதமிருக்கும் வீடுகளில் பார்ப்பது அரிதான விஷயமாக உள்ளது. அரசாங்க உத்தரவாக, காவிரி குடிநீர்  இணைப்புக்காக வீட்டில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அவசியம் என்றது.ஆனால்  எங்கள் வீட்டில் உள்ள மழை நீர் தொட்டியை, தன் வீட்டில் இருப்பதாக கூறி புகைப்படம் எடுத்து புது குடிநீர் இணைப்பு  வாங்கியிருக்கிறார்கள்.பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் மணப்பாறையில் வருடத்திற்கு நல்ல மழை அளவு உண்டு. அப்போது ஒருமுறை கன மழை பெய்யும் சமயத்தில் என் வீட்டின் மாடியில் விழும் தண்ணீரை குழாய் வழியாக கீழே மழைநீர் தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருந்தது. மழையில் நனைந்தபடியே அந்த குழாயை பிடித்து பிடித்து சரி செய்து,உடைப்பை அடைத்து,தண்ணீர் மழைநீர் தொட்டிக்குள் விழும்படி விட்டேன். அதை பார்த்த பக்கத்து வீட்டினர்.நான் மழையில் நனைந்து கொண்டு மழைநீர் சேகரிப்பதை பார்த்து கேலி கிண்டல் செய்தனர். அடுத்த ஐந்து வருடங்களுக்குப் பிறகு  2014 ஆம் ஆண்டு மணப்பாறையில் போதிய மழை இல்லை. தண்ணீருக்காக பலர் போராடிக் கொண்டிருந்தனர்.மக்கள் எங்கு பார்த்தாலும் தண்ணீர் இன்றி அவதிப்பட்டு கொண்டிருந்தனர்.  அந்த சமயத்தில் சிறிது மழை பெய்தாலும் மாடியில் விழும் மழை தண்ணீரையும் சரி,வெளியில் விழும் மழை தண்ணீரையும் சரி, அதைப் பிடிக்க மக்கள் தன் வீட்டு தண்ணீர் குடங்களிலும், பெரிய தொட்டிகளிலும்  அனைவரும் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருகாலத்தில் என்னை பார்த்து சிரித்தவர்களைப் பார்க்கும்போது எனக்கு  கேலியும் கிண்டலுமாக சிரிக்க தோன்றியது.
இந்த ஆண்டு மணப்பாறையில் மழை அளவு அதிகம்.ஆனால்
மழை பெய்யும் சமயங்களில் சமூக வலைதளங்களில் நான் நான் பார்த்தது, "நல்ல மழை, பெரிய மழை, மாமழை" என ஸ்டேட்டஸ் மட்டுமே.
"மழைநீர் சேகரிப்புத் தொடங்கி,தொட்டியில் மழைநீர் சேகரிக்கிறேன்" என்று முகநூலில் ஸ்டேட்டஸ் வந்து பார்க்கவில்லை.

வீட்டிற்கு தேவையான நீரை சேமிப்பதற்கு யாரும் தயாராக இல்லை.நம் மக்களுக்கான எனது வேண்டுக்கோள்,
இனியாவது மழை பெய்யும் போது, மழை நீரை சேமியுங்கள். நாம் செய்வது சிறிய விஷயம்தான். மாடியில் விழும் தண்ணீரை குழாய் மூலம் மழைநீர் தொட்டி அமைத்து அதில் சேகரியுங்கள். நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஏனெனில் மே மாத காலங்களில் நிலத்தடி தண்ணீர் அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்.
நம்மாழ்வார் கூறுவதுபோல, "தண்ணீரை நிலத்தில் தேடாமல் வானத்தில் தேடவேண்டும்" என்று
மரம் நடுவோம்.மழை பெறுவோம்.

கார்த்திக் கிருபாகரன்

Comments

  1. வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. அருமையான பதிவு இருக்கும் போது மதிப்பு தெரியாது இல்லாதப்போ தான் புரியும் என்ற வாசகம் இதுக்குமே பொருந்தும். .அனைவரும் அறிந்து செயற்படுத்த வேண்டிய ஒன்று.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆலமரம்