தீபாவளி(லி)

 தீபாவளி(லி)


தீபாவளி பண்டிகை வந்தாலே மனசுக்கு தனி சந்தோஷம்தான்.
அதுவும் பக்கத்தில் இருக்குற துபாய் வீட்டுக்காரங்க நிறைய வெடி வாங்கி ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே தெருக்களில் வெடி வெடிக்க ஆரம்பிச்சிருவாங்க.வெடித்து சிதறும் பட்டாஸ்கள்,பொங்கி எழும் கலர் புஸ்வாணங்கள்,வண்ண வண்ண மத்தாப்புகள்,சுழலும் சங்கு சக்கரங்கள்,கலர் கலர் வாணவெடிகள்,அணுகுண்டுகள் என்று துபாய் குடும்பம் வெடி வெடிச்சு ஆனந்தமடைவாங்க.வழக்கமா அதை வேடிக்கை பார்ப்பதே எங்களுக்கு ஆனந்தம்.சிறு வயதில் ஒவ்வொரு ஆண்டு தீபாவளியை எதிர் நோக்கி காத்திருப்பேன். ஏன்னா! 'அப்பதான் வீட்டில் செய்யும் மொறு மொறு காரமுறுக்கு, இனிப்பான அதிரசம்,சுத்து முறுக்கு,குலோப் ஜாமுன்' என பல பலகார வகைகள் சாப்பிட முடியும். புதுதுணிமணிகள் வாங்கி உடுத்த முடியும். சந்தோஷமாக நண்பர்களுடனும், பக்கத்து வீட்டாருடனும் சேர்ந்து வெடி வெடித்துக் கொண்டாட முடியும். ஆனால் தீபாவளி நெருங்க,நெருங்க ஏதாவது நெருக்கடியான சூழலால் ஒரு சந்தோஷம் மட்டும் விட்டுக் கொண்டே இருக்கும். அது வெடி கிடைக்காத சூழலல். குடும்பத்தில் இருக்கின்றவர்கள் எல்லாரும் சம்பாதிச்சாலும், அந்த தீபாவளி நேரம் மட்டும் நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க வேண்டியிருக்கும். குழந்தை வயதில் வெடி வெடிக்கும் போது நெருப்பு என் கையில் பட்டது. அதனால் எங்க வீட்டில் எனக்கு தீபாவளிக்கு வெடி வாங்கி கொடுக்கவே மாட்டார்கள்.அடுத்த தீபாவளியில் சுருள் கேப் மட்டும் வாங்கி,அதை துப்பாக்கியில் வைத்து சுட்டு விளையாடி பொழுது கழிந்தது.
வளர ஆரம்பித்து கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிக்கும் போது, அப்பாவிடம் வெடி வாங்க பணம் கேட்டகவே பயமாக இருக்கும்.அம்மாவிடம் கூறி, தூது அனுப்பி.அது பல நேரங்களில் பலனில்லை.பிறகு வெடி கேட்டதே கிடையாது. ஆனால் எங்க வீட்டிலும் வாங்கி கொடுத்தது கிடையாது. பக்கத்து வீட்டுக்காரர்கள்  வெடிக்கும்போது வேடிக்கை பார்த்து பார்த்து வெறுப்புதான் வரும். சில நேரங்களில் பக்கத்து வீட்டுக்காரர் வெடிக்க எனக்கு வெடி தரும் போது, மற்ற நாட்களில் பாசமாக "எங்க அண்ணா" என்று அழைக்கும் அவர்கள் வீட்டு குட்டி தம்பியும், 'என் செல்லம்' என்று அழைக்கும் வீட்டு தாய்மார்களும்,
"அவனுக்கு குடுத்தா,நான் வெடிக்கமாட்டேன்" என்று கதறுவான்.
"அவனுக்கு ஏன் தரீங்க.அவங்க வீட்டுல வாங்கி தர முடியாம இருக்காங்கலா ?" என்று கணவனை கடித்து கொள்ளும் அந்த வீட்டு மனைவிமார்கள் சொல்வது காதில் விழும் போது என் பெற்றோரை நினைத்து கோபம் கொப்பளிக்கும்.

ஒரு கட்டத்தில் காசு சேர்த்து வைக்க ஆரம்பித்தேன். அடுத்த தீபாவளிக்கு சேமித்த பணத்தில் 100 ரூபாய்க்கு வெடி வாங்கினேன். அதுவும் மிளகா வெடி,லட்சுமி வெடி பாக்கெட் மட்டும்.  காரணம், மிளகா வெடி ஒரு பாக்கெட்டிலே எண்ணிக்கை அதிகம். "நிறைய வெடிக்கலாம்" என வாங்கி தீபாவளி அன்று வெடித்தேன்.

போனமுறை அவமானபடுத்திய வீட்டுகாரங்க, துபாய் வீட்டுக்காரங்க முன்  நின்று அவர்களுக்கு ஈடுகொடுத்து வெடித்தேன்.

வெடியை வெளியில் வச்சு,"நானும் நிறைய வெடி வச்சுருக்கேன்" என்கிற மாதிரி காட்டி வெடித்தேன். மிளகா வெடி ரெண்டு சேர்த்து வச்சு வெடிக்க வைத்தேன். மொத்தமாக சேர்த்து வைத்து சரம் மாதிரி வெடிக்க வைத்தேன்.
லட்சுமி வெடியை நெருப்பு வைத்து கையில் பிடித்து தூக்கி போட்டு அந்த ஆண்டு தீபாவளி மிகப்பெரிய அலப்பறைகள் செய்தும் என்னால்  அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

தீபாவளி முடிந்த  பின்னாடி தான், "எவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறது" என்று தெரிந்து கொண்டேன். ஏன்னா! வங்கியில் வீட்டு மாத தவனை கட்டுவதற்காக வைத்திருந்த பணம் தான் தீபாவளி செலவில் முடிந்தது. தீபாவளி ஆரம்பித்தால், வீட்டில் உள்ள எல்லாருக்கும் புது துணி எடுத்துக் கொடுக்கணும், ஸ்வீட் செய்ய, பலகாரம் செய்ய பணம் செலவு பண்ணனும்.
"இதில் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது" என்று கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது.
சொந்த வீடு கட்டி,அதற்காக வாங்கிய வங்கி கடன் கட்டவே பல வருட வாழ்க்கை முடிந்துவிடுகிறது.
கடன் வாங்கி செய்யும் செயலால்,
வருடத்துக்கு ஒரு முறை வரும் பண்டிகை கள் கூட மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலை பல குடும்பங்களில் உள்ளது.

பெரிய வகுப்பு படிக்கும் காலத்தில் தீபாவளி ஆரம்பித்த சமயத்தில், "எதுக்கு வெடி ? அதனால என்ன இருக்கு.காசுதான் வேஸ்ட். வெடி எல்லாம் வேண்டாம் அப்படின்னு" என் மனசை நானே தேற்றிக் கொண்டேன். "வெடி வெடிக்கலையான்னு"
பக்கத்து வீட்டு பையன் கேட்டான்.
அப்போ, "தீபாவளி தமிழர் பண்டிகை கிடையாது.தமிழர்கள் கொண்டாட கூடாது" என்று சிலர் கூட்டங்களில் சொல்லும்போதெல்லாம் கேட்டிருக்கேன். ஆனால் "கிறிஸ்துமஸ், ரம்ஜான் நம் தமிழர் பண்டிகை கிடையாது. என்று அவர்கள் கொண்டாடும் போது நீங்க எல்லாம் சொன்னது இல்லையே" என்று அந்த சிலரிடம் திருப்பி கேள்வி கேட்டால் அவர்களிடமிருந்து சரியான பதில் வந்தது இல்லை. சரி தீபாவளி கதைக்கு வருவோம். இப்படி ஏதோ,அந்த பையனிடம் சொல்லிவிட்டு வந்திடுவேன்.  என்னை பார்த்து சின்ன பசங்க எல்லாம் கேலி பண்ணுவாங்க. "இந்த அண்ணா, வெடி,வெடிக்கவே பயப்படுவார்கள்" என்று.
அதெல்லாம் கோபப்படாமல், "ஒரு காலத்தில லட்சுமி வெடி,அணுகுண்டு வெடி எல்லாம் கையில் பத்த வச்சு தூக்கி போட்டு இருக்கேன்னு" அதை நினைத்து பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு போய்டுவேன்.

காலேஜ் படிக்கும் சமயத்தில் தீபாவளி வரும்போது,வீட்டில் சாமி கும்பிட,ஒரு பாக்கெட் வெடி வைத்து கும்பிட்டு, வெடியை எடுத்து பக்கத்துவீட்டு குட்டி பையன்களுக்கு  கொடுத்து விடுவேன்.அதையே இப்ப வரைக்கும் வழக்கமாக செய்கிறோம். 
சூழ்நிலைகள் மாற மாற "தீபாவளிக்கு வெடி வெடிக்கனும்" என்ற ஆசையே போயிடுச்சு. 'புதுத்துணி எடுக்க வேண்டுமென்ற' ஆசையும் போயிடுச்சு. காலம் மாற மாற மனதை பக்குவப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இப்ப பல ஆயிரத்துக்கும் வெடி வாங்குற அளவுக்கு பணம் இருந்தாலும்,  வெடி வெடிக்கும் ஆசையே இல்லாமல் தான் இருக்கு. நேத்துக்கூட பக்கத்து வீட்டு பையன்கள் வந்து, "அண்ணா,நிறைய வெடி வாங்குவாங்க.வீட்டுல வச்சு சாமி கும்பிடுவாங்க. அப்பறம் அப்புடியே நம்ம கிட்ட  கொடுத்துடுவாங்க" என்றான் ஒருத்தன்.
" நீ வேணா பாரு அண்ணே, இந்த முறை வெடி வெடிபாங்க" என்றான் ஒருத்தன்.

ஆசைபடும் போது கிடைக்காமல்,  அதெல்லாம் கிடைக்கும் போது  அதனை அனுபவிக்க ஆசை இல்லாத எண்ணம்.அவர்கள் பேசுவதை கேட்டு சிரித்தப்படி சென்றேன்.

கார்த்திக் கிருபாகரன்



Comments

  1. EAGLE S EYE
    Idhu ungal vaalkaiyil nadanthavaiya

    ReplyDelete
  2. Nice sir...we crossed all these flipped points✌️

    ReplyDelete
  3. Nice ... not like story..
    Feel real life..

    ReplyDelete
  4. சிறப்பு சகோ 👌👏👌.... அதிலும் இறுதி வரிகள் நிதர்சனம்... ஆசைப்படும் போது கிடைக்கல.. கிடைக்கும் போது அந்த ஆசையே இல்ல...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆலமரம்